HOME      Khutba      கடனை அஞ்சிக் கொள்ளுங்கள்! | Tamil Bayan - 1028   
 

கடனை அஞ்சிக் கொள்ளுங்கள்! | Tamil Bayan - 1028

           

கடனை அஞ்சிக் கொள்ளுங்கள்! | Tamil Bayan - 1028


கடனை அஞ்சிக் கொள்ளுங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : கடனை அஞ்சிக் கொள்ளுங்கள்!
 
வரிசை : 1028
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26-12-2025| 06-07-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை காரியங்களில் மிக கெட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் : 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தையும், இறையச்சத்தையும் நினைவூட்டியவனாக, உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய சட்டங்களை மதித்து, அவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் அடியார்களுடைய உரிமைகளில் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும் என்றும், நம்முடைய கொடுக்கல்-வாங்கல்களில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மிக முக்கியமான ஒரு சட்டத்தை நாம் பேச இருக்கின்றோம். பெரும்பாலான மக்கள் இன்று அந்த சட்டத்தை மதிப்பதே இல்லை. அவ்வளவு அலட்சியம்! துணிவு அதிகமாகிவிட்டது.
 
ஆணவம், பெருமை,“என்னை யார் என்ன செய்ய முடியும்?” என்ற ஒரு விதமான இறுமாப்பு அவர்களை நரகத்தின் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் கோபத்தில் அவர்களை எரித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
அன்பு சகோதரர்களே! எந்த ஒரு சிறிய பாவத்தையும், எந்த ஒரு சிறிய தவறையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் நன்மையையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எந்த ஒரு சிறிய நன்மையால் சொர்க்கம் கிடைக்குமோ, எந்த ஒரு சிறிய பாவத்தால் மனிதன் நரகத்தில் வீசப்படுவானோ அதை நாம் மறக்கக்கூடாது.
 
ஒரு பூனைக்கு கருணை காட்டாததால் ஒரு பெண் நரகத்தில் வீசப்பட்டாள் என்றால், ஒரு நாய்க்கு இரக்கம் காட்டியதால் ஒரு பெண் மன்னிக்கப்பட்டாள் என்றால், சிந்தித்துப் பாருங்கள் எந்த அளவு நாம் அல்லாஹ்வை பயப்பட வேண்டும்!
 
அடியார்களின் விஷயத்திலும், மற்ற உயிரினங்களின் விஷயத்திலும், நமக்கும் படைப்புகளுக்கும் இடையில் உள்ள உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் அனைத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும்.
 
பயப்படாதீர்கள்! உங்களை மோசடி செய்தவன், உங்களை ஏமாற்றியவன், உங்களை ஏமாளி என்று நினைத்துக் கொண்டு, தன்னை சுதாரிப்பானவன், புத்திசாலித்தனமானவன் என்று நினைத்துக் கொண்டு, ஏமாற்றிப் பிழைத்தான் அல்லவா அவர்கள் எல்லாம் தப்பிக்க முடியாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
لَتُؤَدُّنَّ الحُقُوقَ إلى أهْلِها يَومَ القِيامَةِ، حتَّى يُقادَ لِلشّاةِ الجَلْحاءِ، مِنَ الشَّاةِ القَرْناءِ
 
சத்தியமாக நாளை மறுமையில் உரிமைகள், அந்த உரிமைகளை உடையவர்களுக்கு கண்டிப்பாக சேர்க்கப்படும். ஹக்குகள் அந்த ஹக்குகளை உடையவர்களுக்கு கண்டிப்பாக சேர்க்கப்படும். ஒரு கொம்பில்லாத ஆடு முட்டப்பட்டு இருந்தால் அதை முட்டிய ஆட்டிடமிருந்து அதற்காக பழி  தீர்க்கப்படும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2582.
 
யா அல்லாஹ்! எத்தகைய கடும் எச்சரிக்கை நினைத்துப் பாருங்கள்! நாம் பேசிய பேச்சுகளால், நாம் திட்டிய திட்டுகளால், அதற்கும் மேலாக அடுத்து, பிறருடைய செல்வத்தை அபகரித்ததால், வாங்கிக் கொண்டு கொடுக்காமல் ஏமாற்றியதால், ஒப்பந்தங்களை, உரிமைகளை மீறியதால், உடைமைகளை மறுத்ததால் ஒரு மனிதன் நிறுத்தி வைக்கப்பட்டால் என்ன நிலைமை ஆகும்? 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
 
((يُقتَصُّ للخَلقِ بَعضِهم من بَعضٍ، حَتَّى للجَمَّاءِ من القَرْناءِ، وحَتَّى للذَّرَّةِ من الذَّرَّةِ))
 
படைப்புகளிடத்திலே கண்டிப்பாக பழி தீர்க்கப்படும். படைப்புகளிடத்தில் கண்டிப்பாக கிஸாஸ் பழி தீர்க்கப்படும். பாதிக்கப்பட்டவனுக்காக, பாதிப்பை ஏற்படுத்தியவனிடம் நீதம் கண்டிப்பாக பெறப்படும். சொன்னார்கள், கொம்பில்லாத ஆட்டுக்கு அதை முட்டிய கொம்புடைய ஆட்டிடமிருந்து பழி தீர்க்கப்படும். 
 
அது மட்டுமா? யா அர்ஹமர்ராஹிமீன்! ஒரு சிறு எறும்பு இன்னொரு எறும்பை கடித்திருந்தால் அதற்காகவும் பழி தீர்க்கப்படும். ஒரு எறும்பு, எறும்புக்குள் சண்டை வந்து ஒரு எறும்பு இன்னொரு எறும்பை தாக்குகிறது அல்லவா, அதற்காகவும் பழி தீர்க்கப்படும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2582.
 
ரசூலுல்லாஹ் ﷺ உட்காந்திருந்த போது, இரண்டு ஆடுகள் ஒரு தொழுவத்திலே அதனுடைய தீனியை தின்று கொண்டிருந்தன. ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டி தள்ளி விட்டது. அல்லாஹ்வின் தூதர் ﷺ அதை பார்த்து சிரித்தார்கள். 
 
தோழர்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரித்தீர்கள்? உங்களை எது சிரிக்க வைத்தது? சொன்னார்கள்; 
 
عجِبْتُ لها والَّذي نَفْسي بيدِه لَيُقادَنَّ لها يومَ القيامةِ
 
இந்த காட்சியை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன ஆச்சரியம்? குத்தப்பட்டு கீழே தள்ளப்பட்டது அல்லவா, அந்த ஆட்டுக்காக நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் கண்டிப்பாக பழி தீர்க்கப்படும். 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத், எண் : 21438.
 
நினைத்துப் பாருங்கள்! நம்முடைய நிலையை நினைத்துப் பாருங்கள். மனைவியை அடித்தவர்கள், பிள்ளைகளின் மீது கடுமை காட்டியவர்கள், ஒழுக்கம் கற்பிப்பதற்காக அல்ல. தங்களுடைய கெட்ட குணத்தால். தங்களுடைய சகோதரர் மீது அநியாயம் செய்தவர்கள், ஏன் தங்களது பெற்றோர் மீது கூட கைநீட்டியவர்கள் இருக்கலாம். இல்லை என்றால் நாவை நீட்டியவர்கள் இருக்கலாம். இப்படி எத்தனை அக்கிரமங்களை, அநியாயங்களை, உரிமை மீறல்களை நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான அச்ச உணர்வும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.
 
இந்த செயல் நாளை மறுமையிலே அறுவடை செய்யப்படும். நம்முடைய எந்த செயலுக்கும் அதற்கான கூலி அல்லது அதற்கான தண்டனை இல்லாமல் நாம் மறுமையில் கடந்து விட முடியாது. 
 
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏
 
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார். (அல்குர்ஆன் 99:7,8)
 
ஒன்று, நீங்கள் செய்வது நல்லதாக, அல்லது கெட்டதாக இருக்கலாம், அனைத்திற்கும் விசாரணை உண்டு.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தங்களது உம்மத்தை உருவாக்கினார்கள். தங்களது உம்மத்தை சுத்தப்படுத்தினார்கள். ஒரு உன்னதமான, ஒழுக்கமான, நேர்மையான, நீதமான, இறையச்சமிக்க, பண்புகள் மிக்க, பாசமிக்க, கருணைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்கள். ஒரு முழுமையான மனித சமூகத்தை உருவாக்கினார்கள். 
 
அந்த சமூகத்தின் இறையச்சம் என்பது அவர்களது வணக்க வழிபாட்டில் மட்டும் இருக்காது. அவர்களுடைய கொடுக்கல் வாங்கலில் இருக்கும். அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் இருக்கும். அவர்களது பேச்சிலே இருக்கும். 
 
இன்று, பலர் குர்ஆனை திறந்து அச்சத்தோடு ஓதுவதிலே இறையச்சத்தை பேணுகிறார்கள். பெற்றோர் இடத்தில் பேசுவதிலோ, பிள்ளைகளை வளர்ப்பதிலோ, சக மனிதரிடத்திலே பேசுவதிலோ அந்த இறையச்சத்தை அவர்கள் பேணுவதில்லை. 
 
என்னை யார் கேட்பது? என்னை இவன் என்ன செய்ய முடியும்? என்ற அந்த பெருமை அந்த ஆணவம் இவனை விட நான் உயர்ந்தவன், இவனை விட நான் செல்வந்தன், இவனை விட நான் தகுதியால் உயர்ந்தவன் என்ற அந்த ஆணவம் அவனை உரிமை மீற வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்; 
 
مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
 
கருத்து : உங்களது சகோதரனுக்கு அவனுடைய கண்ணியத்திலோ, பொருளாதாரத்திலோ, கொடுக்கல் வாங்கலிலோ இப்படி  ஏதாவது ஒன்றிலோ ஏதாவது ஒரு அநியாயம் அக்கிரம் எல்லை மீறல் நிகழ்த்திருந்தால், இன்றே அவரிடம் சென்று அதை நீங்கள் ஹலால் ஆக்கி கொள்ளுங்கள். பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள். மன்னிக்க வேண்டியதை மன்னித்து விடுங்கள். பேசி சுமூகமான உறவுக்கு வந்து விடுங்கள். அவனும் உங்களை மன்னிக்கட்டும். நீங்களும் அவனை மன்னிக்கட்டும். 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2449.
 
(சில பேர் இப்படி கணக்கு போடுறாங்க. எப்படி? அவன் எனக்கு பத்து ரூபாய் தரணும். அதுக்கு தான் இந்த இருபது ரூபாயை தடுத்து வைத்திருக்கிறேனு சொல்லிட்டு. எப்படி எல்லாம் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே ஒரு கணக்கை வைத்திருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே, நம்முடைய கணக்கு கணக்கல்ல. கணக்கு பார்ப்பவன்  அல்லாஹ் இருக்கிறான். துல்லியமாக விசாரிப்பவன், கணக்கு பார்ப்பவன். அவன் விசாரிப்பான். அவனிடத்திலே சென்று நீ பதில் சொல்ல முடியுமா? உனது எண்ணம், உனது நினைப்பு, உனது மனம் சிலவற்றை உனக்கே நீ செய்ததையே உனக்கு மறக்கச் செய்துவிடலாம். அல்லாஹ் நினைவூட்டுவான். நாளை மறுமையிலே அது கண் முன்னால் வரும். என்ன பதில் சொல்வாய் அல்லாஹ்விடத்திலே?)
 
ஹதீஸின் தொடர் : ஒரு மறுமை நாள் வரும். அங்கே தங்க காசுகள் இருக்காது. வெள்ளி காசுகள் இருக்காது. நன்மைகள் இருந்தால் அவன் செய்த அக்கிரமத்தின், அநியாயத்தின் அளவிற்கு அந்த நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்படும்.  அவனிடத்திலே நன்மைகள் இல்லை என்றால் இவன் யாருக்கு அநியாயம் செய்தானோ, எல்லை மீறினானோ அவனுடைய பாவங்களை எடுத்து இவன் மீது சுமத்தப்பட்டு விடும். 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2449.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! எப்பேர்ப்பட்ட ஒரு பரிதாபமான நிலை! நினைத்து பாருங்கள்!
 
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படி அடியார்களுடைய ஹக்குகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நம்மால் முடிகிறது, நம்மை யாரும் எதிர்க்க முடியாது  என்கிற பெருமை வந்து விடக்கூடாது. கொடுக்கல் வாங்கல் நம்முடைய பேச்சு வாக்குகளும் ஒப்பந்தங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். 
 
இன்று, மக்கள் இந்த விஷயத்தை மிக அலட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். பொருட்படுத்துவதே இல்லை. அதில் முக்கியமாக நான் ஒன்றை குறிப்பிடுவது என்றால், கடன் வாங்கினால் அதை கொடுக்கின்ற பழக்கம் சமூகத்திலே குறைந்து கொண்டே போய் முற்றிலுமாக இல்லை என்று சொல்கிற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. ஒரு மோசமான பழக்கம், கெட்ட பழக்கம், அருவருக்கத்தக்க பழக்கம், அசிங்கமான பழக்கம். 
 
நீ சிரமத்தில் இருந்த போது உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக, நீ இன்ன இன்ன சிக்கலில் துன்பத்தில் இருந்தபோது உன்னை நம்பி கடன் கொடுத்தானே, அவனை நீ ஏமாற்றுவது உன்னுடைய சொந்த நஃப்ஸை ஏமாற்றுவதை போன்றது. அதைவிட கேவலமானது. இஸ்லாமிய மார்க்கம் கடன் கொடுத்தவருக்கு எத்தகைய உரிமையை கொடுக்கின்றது தெரியுமா? எத்தகைய சட்டத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது தெரியுமா?
 
அல்லாஹ்வின் அடியார்களே! கடன் கொடுப்பது ஒரு இபாதத். கடன் கொடுப்பவருக்கு ஒரு நன்மை இருக்கிறது. கடன் பெற்றவர் இவர் அந்த கடனை இவருக்கு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார். நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
அல்லாஹ் இவர் மூலமாக தனக்கு செய்த இஹ்ஸான் என்பதை மறந்த நன்றி கெட்டவன் தான் கடன் வாங்கியவரை ஏமாற்றுவான். கடன் யார் கொடுத்தாரோ அவரை ஏமாற்றுவான். அவரை இழுத்தடிப்பான். பொய் பேசுவான். அவருடைய ஹக்கை மறைக்க மறுக்க பார்ப்பான். அது எப்படி என்றால் கடன் வாங்கும் போது அடிமையாகி விடுவார்கள். கடனை நாம் திருப்பி கேட்க சென்றால் அவர்கள் எஜமான் ஆகி விடுவார்கள்.
 
ஒன்றுக்கு இரண்டு முறை, மூன்று முறை, பத்து முறை, பண்பாக பணிவாக கேட்டதற்கு பிறகு, கொஞ்சம் குரலை உயர்த்தி விட்டால் என்ன மிரட்டுறியா? மிரட்டி பாரு வாங்கிருவியா? நீ இப்படி இப்படி எல்லாம் கேட்டா கொடுத்துருவோம் என்று நினைத்துவிட்டாயா? நீ பேசிட்டல.. இவ்வளவு பேசிட்டு எப்படி  நீ வாங்குறேன்னு பார்ப்போம். 
 
முஸ்லிம்களா இவர்கள்? தொழுகையாளிகளா இவர்கள்? அல்லாஹ்வின் நம்பிக்கை உள்ளவர்களா இவர்கள்? ஹாஜிகளாக இருந்து என்ன பயன்? இவருடைய நோன்பால் என்ன பயன்? இவர்களுடைய இஸ்லாமிய தோற்றத்தால் என்ன பயன்? அல்லாஹ்வின் பார்வையிலே மட்டமானவர்கள்.
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
 
مَنْ ماتَ و عليْهِ دِينارٌ أوْ دِرْهَمٌ ، قُضِيَ من حسناتِه ، ليْسَ ثَمَّ دِينارٌ و لا دِرهَمٌ
 
ஒரு மனிதன் இறக்கின்றான். அவன் மீது வெறும் ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் கடன் இருக்கிறது. ஒரு தீனார் என்றால் இன்றைய மதிப்புக்கு அதிகப்படியாக ஒரு 260 அல்லது 300 ரூபாய் வையுங்கள். ஒரு திர்ஹம் என்றால் அதிகப்படியாக 25 ரூபாய். வெறும் 25 ரூபாய் அவன் மீது கடன் இருக்கிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இவனுடைய நன்மைகள் பிடுங்கப்பட்டு, இவன் வாங்கிய கடன் மறுமையிலேயே அடைக்கப்படும். இவன் வாங்கிய அந்த 25 ரூபாய் கடனுக்காக நாளை மறுமையிலேயே இவனுடைய நன்மைகள் பறிக்கப்படும். அங்கு தீனாரும் இருக்காது. திர்கமும் இருக்காது‌.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2414.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ மேலும் நமக்கு அல்லாஹ்வுடைய தத்துவங்களை அல்லாஹ்வுடைய ஞானங்களை உபதேசம் செய்தார்கள். அல்லாஹு தஆலா இந்த பூமியின் ரகசியங்களை அறிந்தவன். நான் பார்க்காததை அவன் பார்க்கின்றான். நாம் அறியாததை அவன் அறிகின்றான். இந்த உலகத்தில் நடப்பது அல்லாஹ்வின் ஒரு திட்டப்படி, அல்லாஹ்வின் ஒரு கணக்கின்படி நடக்கின்றது.
 
அல்லாஹு தஆலா ஏன் ஒரு ஆடு முட்டப்படுகிறது, இன்னொரு ஆடு முட்டுகிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கலாம் அல்லாஹ் அறிந்தவன். நீங்கள் அறிய மாட்டீர்கள். பாதிப்பை ஏற்படுத்தியவன் யார் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.
 
،: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَاتَيْنِ تَنْتَطِحَانِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ هَلْ تَدْرِي فِيمَ تَنْتَطِحَانِ؟» قَالَ: لَا. قَالَ: «لَكِنَّ اللَّهَ يَدْرِي، وَسَيَقْضِي بَيْنَهُمَا
 
ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு முன்னால் இரண்டு ஆடுகள் சண்டை போட்ட போது அபூதர் ரழியல்லாஹு அன்ஹு விடத்திலே கேட்டார்கள், இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகள் ஏன் சண்டை போட்டுக் கொள்கின்றன என்று?  அபூதர்ரே தெரியுமா?. 
 
சொன்னார்கள், எனக்குத் தெரியாது. அல்லாஹ்வின் தூதரே! ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள், அபூதரே! உங்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன? அல்லாஹ்விற்கு தெரியும். அவன் இந்த இரண்டு ஆடுகளுக்கு இடையிலே தீர்ப்பளிப்பான். 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத், எண் : 21438.
 
எந்த ஒரு உயிரினம் நமக்காக படைக்கப்பட்டு நாளை மறுமையிலே தீர்ப்பளிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக ஆகி விடுங்கள் என்று சொல்லப்படுமே, அந்த ஒரு உயிரினத்துக்கு மத்தியில் கூட அல்லாஹு தஆலா நாளை மறுமையிலே நீதத்தை நிலை நிறுத்துவான் என்றால், பாதிக்கப்பட்டவனை அவனுடைய பாதிப்பிலே விடமாட்டான் என்றால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!
 
அல்லாஹ் கண்ணியப்படுத்திய மனிதனை, தனது கரத்தால் படைத்த மனிதனை, எந்த மனிதனுக்கு அல்லாஹு தஆலா மலக்குகளை சஜ்தா செய்ய வைத்தானோ, அந்த மனிதனை ஒருவன் ஏமாற்றினால், அவன் மீது அக்கிரமம் செய்தால், அவனுடைய உரிமைகளை எடுத்துக் கொண்டால், பறித்துக் கொண்டால், அல்லாஹ் பழிவாங்காமல் விட்டு விடுவானா?
 
அல்லாஹ்வுடைய கண்ணியமான ஒரு படைப்பின் மீது அக்கிரமம் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ
 
பரம ஏழை ஒன்றும் இல்லாத போண்டியானவன் யார் தெரியுமா? சஹாபாக்கள் சொன்னார்கள், அல்லாஹ்வுடைய தூதரே போண்டியானவன் பரம ஏழை என்றால் நாங்கள் யாரை சொல்லுவோம்? யாரிடத்திலே எந்த செல்வம், பொருள், கொடுக்கல் வாங்கல், எதுவுமே தீனார் திர்ஹம் இல்லையோ அவரை தானே சொல்வோம், சொன்னார்கள், இல்லை. என்னுடைய உம்மத்திலே பரம ஏழை  யார் தெரியுமா? நாளை மறுமையில் வரும் பொழுது அவரிடத்திலே தொழுகை இருக்கும். அவரிடத்தில் நோன்பு இருக்கும். அவரிடத்திலே ஜகாத் இருக்கும். ஆனால் ஒருவரை திட்டி இருப்பான். ஒருவர் மீது அவதூறு சொல்லி இருப்பான். ஒருவருடைய செல்வத்தை பறித்திருப்பான். ஒருவருடைய இரத்தத்தை ஓட்டி இருப்பான். ஒருவனை அடித்திருப்பான். இவனுடைய நன்மைகள் அவர்களுக்கு கொடுக்கப்படும். இவனிடத்திலே கொடுப்பதற்கு நன்மைகள் இல்லை என்றால் அவர்களுடைய பாவங்களை எடுத்து இவனுடைய தலையிலே சுமத்தப்படும். பிறகு இவன் நரகத்திலே வீசி எறியப்படுவான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4678.
 
அல்லாஹ்வின் அடியார்களே! பிரச்சனை இந்த உலகத்தோடு முடிந்து விடும் என்று நினைக்காதீர்கள். நாளை மறுமையிலே அல்லாஹ்வின் நீதமான தீர்ப்பு மன்றம் இருக்கிறது. உலகத்திலே தப்பித்து விடுவதால் உலகத்தில் சமாளித்து விடுவதால் கப்ரிலே சமாளிக்க முடியாது. மஹ்ஷரிலே சமாளிக்க முடியாது. நன்மைகள் நிறுக்கப்படும் போது சமாளிக்க முடியாது. ‘சிராத்’ பாலத்தை கடக்க வேண்டிய நிலை வரும். அப்போதும் சமாளிக்க முடியாது.
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ இந்த கடனை குறித்து எச்சரித்தார்கள். கடுமையாக எச்சரித்தார்கள். எந்த அளவு கடனை குறித்து எச்சரித்தார்களோ, நம்முடைய சமுதாயம் என்னமோ வறுமையை நம்பாத சமுதாயமோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு இவர்களுடைய அந்த பழக்கம் இவர்களுடைய கொடுக்கல் வாங்கல் பண்பு ஆகிவிட்டது. 
 
மறுமையை நம்பியவனா இப்படி மோசடி செய்வான்? ஆகிரத்தை நம்பியவனா இப்படிப்பட்ட ஒரு பேச்சை பேசுவான் என்று? 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொல்லிய அந்த கடுமையான எச்சரிக்கையை பாருங்கள். யாரைப் பற்றி சொன்னார்கள்? 
 
அல்லாஹ்வின் பாதையிலே தனது உயிரை கொடுத்தவன், தனது மனைவியை விதவை ஆக்கியவன், தனது பிள்ளைகளை அனாதைகள் ஆக்கியவன், அந்த ஷஹீத், கடனுள்ள நிலையில் கொல்லப்பட்டிருந்தால், ஷஹீதை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்? 
 
அல்லாஹ்விடத்திலே நபிமார்கள் ரசூல்மார்கள் முதல் தகுதி, இரண்டாவது தகுதி சித்தீக், மூன்றாவது தகுதி ஷஹீத், அவன் யாராயிருந்தாலும் சரி, அவன் ஆலிம்சாவா இருக்கணும்னு அவசியம் கிடையாது. மார்க்கத்தை பெருசா தெரிஞ்சுக்கணும்னு அவசியம் கிடையாது. ராத்திரி எல்லாம் தஹஜ்ஜத் தொழுது இருக்கணும்னு அவசியம் கிடையாது.
 
ஒரு ஷஹீத், அல்லாஹ்வைப் பற்றி, அல்லாஹு - ரப்பு, லாயிலாஹ இல்லல்லாஹ் தவிர எதுவுமே அறியாதவன் ஷஹீதாயிட்டான். அவ்வளவு தான் தெரியும். அவனுக்கு இஸ்லாம் உண்மையானது, உயர்ந்தது, நான் இஸ்லாத்துக்காக உயிரை கொடுத்தேன் அவ்வளவுதான் இது தெரிஞ்சா போதும். அல்லாஹ் உண்மையானவன். மறுமை உண்மையானது. சொர்க்கம் உண்மையானது. இதை தவிர அவனுக்கு குர்ஆனும் மனப்பாடம் இல்லை. ஹதீஸும் மனப்பாடம் இல்லை. பரவாயில்லை. அவன் ஷஹீதாகி விட்டால் அவனுடைய ஒரு சொட்டு ரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னால் அவனை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
 
இங்கே சித்தீக்குகள் எல்லாம் கப்ர்களில் நாளை மறுமையில் விசாரணை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவனை அப்படியே தனியாக அல்லாஹு சொர்க்கத்திற்கு தூக்கி சென்று விடுகிறான். எப்பேர்பட்ட பாக்கியம்? ஷஹீதுடைய பாக்கியம். அவன் மீது கடன் இருந்தால் அந்த ஷஹீதை அல்லாஹு தஆலா நிறுத்தி வைத்து விடுகிறான். 
 
அப்படி என்றால் நம்முடைய ஹஜ், நம்முடைய உம்ரா, நம்முடைய இன்ன பிற அமல்கள் எல்லாம் எங்கே வந்து நிற்கும்? ஷஹாதத் ஒரு மனிதனுடைய கடனை, கடன் மன்னிக்கப்படாமல் நிறுத்தி விடுகிறது என்றால் எப்பேர்பட்ட அச்சம் நமக்கு வரவேண்டும்!
 
சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். மிக அலட்சியமாக எடுத்துக் கொள்கிறோம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ உடைய காலத்திலே நடந்த ஒரு சம்பவம், ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் இமாம் அஹ்மத் பதிவு செய்கிறார்கள். 
 
ஒரு மனிதர் இறந்து விட்டார். அவரை குளிப்பாட்டினோம், அவருக்கு கஃபன் செய்தோம், நறுமணம் பூசினோம். பிறகு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் தொழ வைப்பதற்காக வந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் தொழ வையுங்கள் என்று சொன்னோம். 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்களை முந்திக் கொண்டு இமாமாக நின்று தொழ வைப்பதற்காக வந்தார்கள். நின்று விட்டு திரும்பி கேட்டார்கள். இவர் மீது கடன் இருக்கிறதா? நாங்கள் சொன்னோம், அல்லாஹ்வுடையே ரசூல் ﷺ அவர்களே! இரண்டு தீனார் இருக்கிறது. 
 
இரண்டு தீனார் என்பது இன்றைய மதிப்பு படி அதிகபட்சமா 300 ரூபாய். இரண்டு தீனார் வச்சா 600 ரூபாய் கடன். அல்லாஹ்வின் தூதர் ﷺ தொழ வைக்காமல் திரும்பி விட்டார்கள்.
 
அபு கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்த இரண்டு தீனாருக்கு நான் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன். தொழ வைத்து விடுங்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ பிறகு தொழ வைத்தார்கள். கடன் கொடுத்தவனுடைய ஹக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 
 
அபூ கத்தாதா அந்த இரண்டு தீனாரை கொடுத்து விட்டாயா என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ பிறகு ஒரு நாள் கழித்து அபூ கத்தாதாவுடைய வீட்டை தேடி சென்று விட்டார்கள். 
 
(எப்படி? தான் சஹாபி அவர்தான பொறுப்பெடுத்துக்கிட்டாரு என்ற அலட்சியமாக இருந்தார்களா? சமூக அக்கறை வேண்டும். உங்களுக்கு அல்லாஹு தஆலா உங்களுக்கு ஒரு கண்ணியத்தை, மதிப்பு மரியாதையை கொடுத்திருந்தால் உங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை வேண்டும். சமூக பிரச்சினைகளை நீங்கள் தீர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவனுக்கு உதவி செய்ய வேண்டும். அக்கிரமக்காரனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு எதற்கு அந்த சமூக அந்தஸ்து? உங்களுக்கு எதற்கு மதிப்பு? இந்த மதிப்பை வைத்து உங்களது பெருமைக்காகவா அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தான்?)
 
அல்லாஹ்வுடைய தூதர் தேடி சென்று விட்டார்கள். அபூ கத்தாதா சொன்னார்கள், அல்லாஹ்வின் தூதரே! நேற்று தானே இறந்தார். நேத்து தான மௌத்தா போனாரு. நேத்து தானே இது‌ நடந்துச்சு. சொன்னார்கள் ரசூல் ﷺ சரி, என்று திரும்பி விட்டு மறுபடியும் அடுத்த நாள் வருகிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த இரண்டு தீனார்களை கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். 
 
ரசூலுல்லாஹ் ﷺ சொல்கிறார்கள்: 
 
«الْآنَ بَرَدَتْ عَلَيْهِ جِلْدُهُ»
 
இப்போது தான் அவருடைய தோல் அவருக்கு குளுமை அடைகிறது. 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 14536.
 
எந்தளவுக்கு ரசூல் ﷺ ஃபாலோ செய்தார்கள் யோசித்துப் பாருங்கள். கண்காணித்தார்கள், விசாரித்தார்கள், நம்பிக் கொண்டு விட்டு செல்லவில்லை.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதுதான் மார்க்க பொறுப்பு. இதுதான் மறுமை அச்சம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லுகின்றார்கள். சஹாபாக்களுக்கு ஜிஹாதை பற்றிய நன்மைகளை சொன்னார்கள். ஈமானை பற்றிய நன்மைகளை சொன்னார்கள். 
 
அல்லாஹ்வின் தூதரே! சரி, அப்படியா? அல்லாஹ்வின் பாதையிலே நான் கொல்லப்பட்டு விட்டால் எனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடுமா? ரசூல் ﷺ சொன்னார்கள்; ஆமாம். அல்லாஹ்வின் பாதையிலே நீ கொல்லப்பட்டால், பொறுமையாளனாக உறுதி உடையவனாக இருந்து, உன்னுடைய பாதிப்புகளை எல்லாம் அல்லாஹ்விடத்திலே நன்மைகளாக எதிர்பார்த்து நீ எதிரிகளை முன்னோக்கி சென்றவனாக இருந்து, புறமுதுகு காட்டாதவனாக இருந்து நீ கொல்லப்பட்டால், உனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்று சொன்னார்கள். 
 
திரும்பவும் அவர் கேட்கிறார், திரும்பவும் அதே பதிலை சொல்லிவிட்டு அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்; சகோதரனே! கடனைத் தவிர, கடனைத் தவிர. இதை‌ எனக்கு ஜிப்ரீல் சொன்னார் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ சொல்கின்றார்கள். இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை பதிவு செய்கின்றார்கள். (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1885.
 
யார் மக்களிடம் இருந்து செல்வத்தை வாங்கி அதை அவன் சுகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறானோ, தன்னுடைய ஒரு அவசிய தேவைக்காக வாங்கவில்லை, தன்னுடைய  வறுமைக்காக வாங்கவில்லை, தனது பிள்ளைகளுக்கு பசித்தவர்களுக்கு வாங்கவில்லை, சுகபோக வாழ்க்கைக்காக. 
 
இப்படி ஒருத்தர் ஒருத்தரிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டு அப்படியே வேலை வெட்டி இல்லாமல் அவன் தன்னுடைய இன்பமான சுகமான ஆடம்பரமான வாழ்க்கைக்காக யார் வாங்குகிறாரோ அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்; 
 
مَن أخَذَ أمْوالَ النَّاسِ يُرِيدُ أداءَها أدَّى اللَّهُ عنْه، ومَن أخَذَ يُرِيدُ إتْلافَها أتْلَفَهُ اللَّهُ
 
யார், தன்னுடைய தேவைக்காக கடன் வாங்கி அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு அந்த கடனை அடைத்து உதவி செய்வான். யார், மக்களுடைய செல்வத்தை அழிப்பதற்காக இப்படி கடன் வாங்குகிறானோ அல்லாஹ் அவனை அழிப்பான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2387.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இது குறித்து எச்சரிக்கை செய்தார்கள். முஃமினுடைய ஆன்மா எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் அதனுடைய கடன் அடைக்கப்படுகின்ற வரை அது நிறுத்தி வைக்கப்பட்டு விடும் 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ கடனை குறித்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள். 
 
சஹாபாக்கள் பயந்தார்கள், பயந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்ன இவ்வளவு கடுமையாக நீங்கள் எச்சரிக்கை செய்கிறீர்கள்? ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்;
 
இவ்வளவு கடுமையாக கடனை குறித்து எச்சரிக்கை செய்கின்றீர்களே என்று கேட்டபோது சொன்னார்கள், உங்களுக்கு தெரியுமா? ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதையிலே கொல்லப்படுகிறான். மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். மீண்டும் கொல்லப்படுகிறான். மீண்டும் உயிர்பிக்கப்படுகிறான். மீண்டும் கொல்லப்பட்டானேயானால் அவன் மீது கடன் இருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டிருந்தால், அவன் சொர்க்கம் செல்ல மாட்டான். அவனுடைய கடன் நிறைவேற்றப்படுகின்ற வரை. (குறிப்பு:2)
 
அறிவிப்பாளர் : முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 4684.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
இன்று இப்படி எல்லாம் மக்கள் செய்வார்கள் என்பதை அல்லாஹ்வுடைய அறிவிப்பை கொண்டு அறிந்திருந்த ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள். 
 
«أَيُّمَا رَجُلٍ تَدَيَّنَ دَيْنًا، وَهُوَ مُجْمِعٌ أَنْ لَا يُوَفِّيَهُ إِيَّاهُ، لَقِيَ اللَّهَ سَارِقًا»
 
திருடுவது என்பது ஒரு மனிதன் அறியாமல் இருக்கும் பொழுது அவனுடைய செல்வத்தை பின்பக்கமாக வந்து பறிப்பதோ எடுத்துச் செல்வதோ அல்ல. 
 
ஒரு மனிதன் கடன் வாங்குகிறான். ஆனால், அவனது நோக்கம் அதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. 
 
ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்; அவன் திருடனாக அல்லாஹ்வை சந்திப்பான். 
 
அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 2410.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ கடனை குறித்து பயந்தார்கள். அல்லாஹ்விடத்திலே பாதுகாப்பு தேடினார்கள். நபி ﷺ பாதுகாப்பு தேடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று கடனை குறித்து பாதுகாவல் தேடினார்கள். 
 
ரசூலுல்லாஹ் ﷺ தொழுகையில் தஷஹ்ஹுதிலே  நான்கு விஷயங்களில் இருந்து பாதுகாப்பு தேடியதற்கு பிறகு அவர்கள் சொல்வார்கள்.
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ
 
யா அல்லாஹ்! பாவத்தில் சிக்குவதில் இருந்து, கடனில் சிக்குவதில் இருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். 
 
தொடர்ந்து இந்த துஆவை கேட்டுக் கொண்டிருந்த தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! கடன் படுவதில் இருந்து இப்படி பாதுகாப்பு தேடுகின்றீர்களே? 
 
சொன்னார்கள்; ஆம். மனிதன் கடன் பட்டு விட்டால் பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் மீறி விடுவான். (குறிப்பு:3)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 832.
 
எப்படிப்பட்ட நிலைமை இது. ஒரு முனாஃபிக் உடைய குணம். இது சாதாரணமான ஒரு குணம் அல்ல.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ நமக்கு துஆ சொல்லிக் கொடுத்தார்கள். இந்த துஆக்களை யார் நல்ல எண்ணத்தோடு கண்டிப்பாக நான் கடன்களை அடைக்க வேண்டும், கடனில்லாமல் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இந்த துஆக்களை ஓதுவார்களோ அல்லாஹ் அவர்களது கடனை கண்டிப்பாக‌ அடைப்பான். அதற்கான சூழ்நிலைகளை அல்லாஹ் உருவாக்குவான். அதற்கான வாய்ப்புகளை இவருக்கு கொடுப்பான். 
 
ஒரு சஹாபி வருகின்றார், அல்லாஹ்வின் தூதரே! 
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ரொம்ப பிரச்சனை, ரொம்ப மனக்கவலை, நிறைய கடன்கள் இருக்கின்றது என்று முறையிட்டார். சொன்னார்கள்; நான் உனக்கு ஒரு வார்த்தையை சொல்லித் தருகிறேன். அந்த வார்த்தையை சொல். அல்லாஹ் உனது கவலையை போக்குவான். உனது கடனை நிறைவேற்றுவான். சொல்லித் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! 
 
சொன்னார்கள், காலையிலும் மாலையிலும் நீ சொல்!
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ 
 
அந்த சஹாபி சொல்கிறார்; நான் இதை ஓதிக்கொண்டே இருந்தேன். அல்லாஹ் எனது கவலையும் போக்கினான். எனது கடன்களை அடைப்பதற்கு உண்டான வழிகளையும் அல்லாஹு தஆலா உருவாக்கி கொடுத்தான் என்று. (குறிப்பு:4)
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1555.
 
அதுபோன்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இன்னொரு துஆவை சொல்லிக் கொடுத்தார்கள்,
 
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே நான் எனது எஜமானிடத்திலே ஒப்பந்தம் செய்து அவருக்கு ஒரு தொகையை கொடுத்து விடுதலை பெற்றுக் கொள்வதற்காக நான் முடிவு செய்தேன். ஆனால், நான் முடிவு செய்த தொகையை கொடுக்க முடியவில்லை என்று சொன்னபோது அலி ரலியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வுடைய தூதர் தனக்கு கற்றுக் கொடுத்த துஆவை அவருக்கு கற்றுக் கொடுத்தார்கள். 
 
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
 
யா அல்லாஹ்! ஹலாலை கொண்டு ஹராமை விட்டு பாதுகாத்துக் கொள்! உனது கொடையை கொடுத்து மற்றவரை விட்டு என்னை தேவையற்றவராக ஆக்கு! 
 
அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3563.
 
அதுபோன்று, இன்னொரு மகத்தான துஆவை ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்; முஆது ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இந்த துஆவை நீ ஓதினால் மலை போன்று கடன் இருந்தாலும் அல்லாஹ் உனக்கு அதை நிறைவேற்றி கொடுப்பான்.
 
(அப்ப இந்த துஆக்களுக்கு பள்ளிவாசல்ல  உட்கார்ந்து ஓதிக்கிட்டே இருங்க வேற முயற்சி செய்யாதீர்கள் என்று அர்த்தம் கிடையாது. உண்மையான எண்ணத்தில் துஆ கேட்பவனுக்கு அல்லாஹு தஆலா அதற்கான வழியை கொடுப்பான். அல்லாஹு தஆலா அதற்கான வழியை அவருக்கு இலகுவாக்கி வைப்பான்.)
 
: اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزِع الملك ممن تشاء، وتُعِزُّ من تشاء، وتُذِلُّ من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير، رحمن الدنيا والآخرة ورحيمهما، تعطيهما من تشاء، وتمنع منهما من تشاء، ارحمني رحمةً تُغنيني بها عن رحمة من سواك
 
இந்த துஆவை நீங்கள் ஓதுங்கள். அல்லாஹு தஆலா உங்களுடைய கடன்களை அடைத்து வைப்பான். உங்கள் சார்பாக உங்களது கடனை நிறைவேற்றுவதற்கு உண்டான வழிகளை உருவாக்குவான் என்று ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபுதாவூத்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! மீண்டும் ஒரு முறை எனக்கும், உங்களுக்கும் நினைவுப்படுத்திக் கொள்கிறேன். இந்த பூமியில் இருந்து நாம் மறுமைக்கு சொல்லும்பொழுது அல்லாஹ்வுடைய அடியார்களின் உரிமைகள் நம் மீது நாம் நிறைவேற்றாமல் இருந்து விடக்கூடாது.
 
ஆகவேதான், ஒரு மையத் இறந்த உடனே அவருடைய கஃபன் உடைய செலவு போக அடுத்தது அவருடைய கடனை நிறைவேற்றியதற்கு பிறகுதான் அவருடைய தாய்க்கோ, தந்தைக்கோ, பெற்ற பிள்ளைகளுக்கோ, கட்டிய மனைவிகளுக்கோ இறந்தவரின் பொருள்கள் சொத்துகள் சொந்தமாகும். 
 
இல்லை என்றால் அவருடைய கடனை கொடுத்ததற்கு பிறகு சக்தி இல்லை என்றால் அவ்வளவுதான் போட்டி போட முடியாது. கடன் கஃபனுக்கு பிறகு ஒரு மையத்துடைய நிறைவேறப்படக்கூடிய உரிமை என்ன? அவருடைய கடன். கடனை கொடுக்காமல் சொத்துகளை பிரித்தால் அத்தனை பேரும் ஹராமை சாப்பிடுகிறார்கள்.
 
அவன் ஹஜ் செஞ்சா என்ன? உம்ரா செஞ்சா என்ன? பிறகு அதை வச்சு பள்ளிவாசல் கட்டினால் என்ன? ஒன்னும் பிரயோஜனம் கிடையாது. நாளை மறுமையிலே எல்லாம் அந்த கடன்காரங்களுக்கு போயிடும்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்மையும், நமது சமூகத்தையும் அல்லாஹு தஆலா சீர்திருத்தம் செய்வானாக! அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணக்கூடிய நல்ல மக்களாக என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானாக! மறுமையின் மகத்தான வெற்றி பெற்ற அல்லாஹ்வுடைய சொர்க்கத்தில் நுழையக்கூடிய நல்லடியார்களில் என்னையும், உங்களையும், நமது பெற்றோரையும், குடும்பத்தார்களையும், சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
أنَّهُ قَامَ فيهم، فَذَكَرَ لهمْ أنَّ الجِهَادَ في سَبيلِ اللهِ وَالإِيمَانَ باللَّهِ أَفْضَلُ الأعْمَالِ، فَقَامَ رَجُلٌ، فَقالَ: يا رَسولَ اللهِ، أَرَأَيْتَ إنْ قُتِلْتُ في سَبيلِ اللهِ، تُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقالَ له رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: نَعَمْ، إنْ قُتِلْتَ في سَبيلِ اللهِ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ، ثُمَّ قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: كيفَ قُلْتَ؟ قالَ: أَرَأَيْتَ إنْ قُتِلْتُ في سَبيلِ اللهِ، أَتُكَفَّرُ عَنِّي خَطَايَايَ؟ فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: نَعَمْ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ، إلَّا الدَّيْنَ؛ فإنَّ جِبْرِيلَ عليه السَّلَامُ قالَ لي ذلكَ. وفي روايةٍ: جَاءَ رَجُلٌ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، فَقالَ: أَرَأَيْتَ إنْ قُتِلْتُ في سَبيلِ اللهِ... الراوي : أبو قتادة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 1885 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : من أفراد مسلم على البخاري
 
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.
 
பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
 
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள்.
 
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
 
அவற்றில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால்...?" என்று கேட்டார் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி இடம்பெற்றுள்ளது.
 
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1885.
 
குறிப்பு: (2)
 
كنَّا جلوسًا عندَ رسولِ اللهِ صلى الله عليه وسلم ، فرَفَعَ رأسَه إلى السماءِ ، ثم وضَعَ راحتَه على جبهتِه ، ثم قال : سبحان اللهِ ! ماذا نزَلَ مِن التَشْدِيدِ ؟ فسَكَتْنَا ، وفَزِعْنَا ، فلما كان مِن الغدِ سأَلْتُه : يا رسولَ اللهِ ، ما هذا التشديدُ الذي نزَلَ ؟ فقال : والذي نفسي بيدِه، لو أن رجلًا قُتِلَ في سبيلِ اللهِ ، ثم أُحْيِىَ ، ثم قُتِلَ ، ثم أُحْيِىَ ، ثم قُتِلَ ، وعليه دَيْنٌ ، ما دخَلَ الجنةَ حتى يُقْضَى عنه دَيْنُه. الراوي : محمد بن عبدالله بن جحش | المحدث : الألباني | المصدر : صحيح النسائي الصفحة أو الرقم: 4698 | خلاصة حكم المحدث : حسن
 
முஹம்மது பின் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
 
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, தமது உள்ளங்கையை நெற்றியில் வைத்துவிட்டு, "சுப்ஹானல்லாஹ்! எத்தகைய கடுமை (கட்டளை/எச்சரிக்கை) இறக்கப்பட்டுள்ளது!" என்று கூறினார்கள். நாங்கள் அமைதியாகிவிட்டோம்; மேலும் அச்சமடைந்தோம். அடுத்த நாள் நான் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இறக்கப்பட்ட அந்தக் கடுமை என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிர்ப்பிக்கப்பட்டு, பிறகு கொல்லப்பட்டு, பிறகு உயிர்ப்பிக்கப்பட்டு, பிறகு (மீண்டும்) கொல்லப்பட்டாலும், அவர் மீது கடன் இருந்தால், அந்தக் கடன் அடைக்கப்படும் வரை அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்."
 
அறிவிப்பாளர் : முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 4684.
 
குறிப்பு: (3)
 
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ " فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ، حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (இறுதி அமர்வில்) பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால் வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வ ஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்” என்று கூறுவார்கள்.
 
(பொருள்: இறைவா! மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
 
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புக் கோர என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 832.
 
குறிப்பு: (4)
 
دخل رسول اللهِ صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له : أبو أمامة, فقال : يا أبًا أمامة مالي أراك جالسا في غير وقت صلاة ؟ قال : هموم لزمتني وديون يا رسول اللهِ, قال : أفلا أعلمك كلاما إذا قلته أذهب الله همك وقضى عنك دينك,قلت : بلى يا رسول اللهِ, قال : قل إذا أصبحت وإذا أمسيت : اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال قال : ففعلت ذلك فأذهب الله تعالى همي وغمي وقضى عني ديني خلاصة حكم المحدث : غريب الراوي : أبو سعيد الخدري | المحدث : ابن حجر العسقلاني | المصدر : الفتوحات الربانية الصفحة أو الرقم : 3/123 التخريج : أخرجه أبو داود (1555)، والبيهقي في ((الدعوات الكبير)) (305)
 
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கே அபூ உமாமா (ரழி) என்ற அன்சாரித் தோழர் ஒருவரைக் கண்டார்கள்.
 
அவர்கள், "அபூஉமாமாவே! தொழுகை நேரம் இல்லாதபோது நீங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பதைக் காண்கிறேனே, என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.
 
அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! கவலைகளும் கடன்களும் என்னை ஆட்கொண்டுள்ளன" என்று கூறினார்.
 
அதற்கு அவர்கள், "நான் உமக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தரட்டுமா? அவற்றை நீர் கூறினால், அல்லாஹ் உமது கவலையைப் போக்கி, உமது கடனைத் தீர்த்து வைப்பான்" என்று கேட்டார்கள்.
 
அதற்கு அவர், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (கற்றுத் தாருங்கள்)" என்று கூறினார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நீர் காலையிலும் மாலையிலும் இவ்வாறு கூறுவீராக:
 
'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல் ஹஸனி, வ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல் கஸலி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி வல் புக்லி, வ அஊது பிக்க மின் கலபதித் தய்னி வ கஹ்ரிர் ரிஜால்'
 
(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். கடன் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)"
 
அவர் (அபூஉமாமா) கூறினார்: "நான் அவ்வாறு செய்தேன்; அல்லாஹ் என் கவலையைப் போக்கி, என் கடனைத் தீர்த்து வைத்தான்."
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1555.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/