துஆவை நம்புங்கள்! | Tamil Bayan - 1033
துஆவை நம்புங்கள்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : துஆவை நம்புங்கள்!
வரிசை : 1033
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 02-01-2026 | 13-07-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை காரியங்களில் மிக கெட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அந்த அல்லாஹ்வின் கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய அன்பிற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக;
இந்த குத்பாவின் ஆரம்பத்தில் உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவையும் இறையச்சத்தையும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பை வேண்டியவனாக, அவனுடைய ரஹ்மத்தையும் பரக்கத்துகளையும் வேண்டியவனாக, நல்ல அழகிய முடிவையும், மறுமையில் மகத்தான சொர்க்க வெற்றியையும் வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்மை மன்னித்தருள்வானாக! நம்முடைய பெற்றோர்களையும், குடும்பத்தார்களையும், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா மன்னித்து அருள்வானாக! ஆமீன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மிக முக்கியமான ஒரு சட்டத்தையும், மிக முக்கியமான ஒரு அமலையும் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பலமுறை இதைப்பற்றி நாம் கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமான சட்டம் இது; மிக முக்கியமான அமல் இது. நம்முடைய உள்ளங்கள் எப்போதும் ஷைத்தானுடைய ஊசலாட்டங்களுக்கு இரையாகிக் கொண்டே இருக்கின்றன. நாம் அவனுக்கு ஒரு வேட்டையைப் போன்றவர்கள். நம்முடைய உள்ளங்களை வேட்டையாடுவதுதான் அவனுடைய வேலை.
இந்த உள்ளத்தில் அவன் என்ன செய்கிறான்? மறதியை விதைக்கிறான். அவநம்பிக்கையை உருவாக்குகிறான். அல்லாஹ்விடமிருந்து தூரத்தை ஏற்படுத்துகிறான். வணக்க வழிபாடுகளின் மீது இருக்க வேண்டிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் மெதுவாக குறைத்துக் கொண்டே போகிறான்.
நீங்கள் அல்லாஹ்வோடு நெருக்கமாக இருக்க விரும்புவீர்கள்; அவனோ உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்க முயற்சி செய்து கொண்டே இருப்பான். நீங்கள் அல்லாஹ்விடம் நெருங்குவதற்கான வழிகளை தேடுவீர்கள்; அவனோ உங்களை அல்லாஹ்விடமிருந்து விலக்குவதற்கான வழிகளை உருவாக்கிக் கொண்டே இருப்பான்.
இதில் இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அதை நமக்கு அழகாக்கி காட்டுவான். அலங்கரித்து காட்டுவான். அப்போதுதான் நாம் அதை நோக்கி செல்வோம் என்று. அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே ஷைத்தானின் ஊசலாட்டங்களை பற்றி குறிப்பிடக்கூடிய இடங்களை நீங்கள் கவனித்து பாருங்கள்!
وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ
அவர்களுக்கு ஷைத்தான் அவர்களுடைய காரியங்களை செயல்களை அலங்கரித்து காட்டினான் என்று அல்லாஹு தஆலா சொல்லியிருப்பான். (அல்குர்ஆன் 29:38)
இன்று, இணைவைப்பவர்கள், சிலை வணங்கிகள் செய்யக்கூடிய அந்த செயல்களை, இந்த ஈமானிய இஸ்லாமிய ஏகத்துவ கண்ணோட்டத்தோடு நாம் பார்க்கும் பொழுது அல்லாஹ் கொடுத்த அந்த தெளிவான அறிவின் பார்வையை கொண்டு நாம் பார்க்கும் போது அது எவ்வளவு கேவலமான, எத்தகைய அசிங்கமான, ஒரு மூடத்தனமான செயலாக இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்!
ஆனால், அதே அசிங்கமான, ஆபாசமான, மூடத்தனமான, கிறுக்குத்தனமான செயல்களை அந்த சிலை வணங்கிகளுக்கு பக்தியாக ஷைத்தான் அலங்கரித்து விடுகிறான். ஷைத்தானுடைய வேலையே இதுதான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலகத்தில் நமக்கு மிகப்பெரிய ஒரு போர், மிகப் பெரிய ஒரு யுத்தம் இருக்கிறது. அது என்ன யுத்தம்? நம்முடைய நஃப்ஸோடு ஷைத்தானோடு உள்ள யுத்தம். இறுதிவரை அவனை எதிர்த்து நாம் யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவனை இன்று நாம் வெல்வதற்கு விட்டு விட்டால், ஜெயிப்பதற்கு விட்டு விட்டால், அவ்வளவுதான் நம்மை அவன் வீழ்த்தி அவனுடைய வழியிலே சிக்க வைத்து விட்டால் அல்லாஹ் நம் மீது அருள் புரிந்தாலே தவிர நாம் தப்பிக்க முடியாது.
ஏன் அல்லாஹு தஆலா ஒவ்வொரு முறையும் அல்லாஹ்விடம் நீங்கள் பாதுகாப்பு தேடுங்கள். தூக்கி எறியப்பட்ட, அல்லாஹ்வின் கருணையிலிருந்து விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்று கூறுகிறான். நபிக்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். எப்பேர்பட்ட சதிகாரன்! என்று யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய உள்ளங்கள் அதை புத்துணர்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதிலே ஈமானுடைய வலிமையை அதற்கு நாம் ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பை இந்த உள்ளத்திற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பயத்தை இந்த கல்புக்கு நாம் உபதேசம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
என் உள்ளமே! அல்லாஹ்வை மறக்காதே! அல்லாஹ்வை விட்டு தூரமாகாதே! அல்லாஹ்வை நம்பு! அல்லாஹ்விடத்தில் கேள்! அல்லாஹ்விடத்தில் ஆதரவு வை! அல்லாஹ்விற்கு நெருக்கமாகிவிடு! அல்லாஹ்வை விட்டு தூரமாகி விடாதே! அல்லாஹ் உனக்கு போதுமானவன்.
அல்லாஹ் உனக்கு கொடுப்பான். உனக்கு தேவையானதையும் கொடுப்பான். உன்னுடைய தேவைக்கு அதிகமாகவும் கொடுப்பான். நீ கேட்டதையும் கொடுப்பான். நீ கேட்காததையும் கொடுப்பான். நீ கேட்டதை விட சிறந்ததையும் உனக்கு கொடுப்பான். நீ கேட்டதை விட அதிகமாகவும் அவன் கொடுப்பான். உனக்கு நல்லது எது? என்று உன்னைவிட அவனுக்கு தெரியும். உனக்கு எது இம்மை மறுமைக்கு பலன் உள்ளது என்று உன்னைவிட அவன் அதிகம் அறிந்தவன்.
وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
நீங்கள் ஒன்றை வெறுக்கலாம், அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம், அதுவோ உங்களுக்கு தீமையானதாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:216)
கருத்து : நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள். ஆனால், அது உங்களுக்கு கெட்டதாக தீயதாக இருக்கும். நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள். ஆனால் அதுவோ உங்களுக்கு நல்லதாக இருக்கும். அல்லாஹ் அறிந்தவன். அவனுக்குத்தான் அனைத்தும் தெரியும். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் சாப்பிடக்கூடிய உணவு நமக்கு ஒட்டுமா ஒட்டாதா? அது நமக்கு ஆரோக்கியமாக அமையுமா? அல்லது நமக்கு ஆபத்தாக அமையுமா? நமக்கு முன்னால் இருக்கக்கூடிய அந்த உணவை கூட நாம் அதனுடைய பலாபலன்களை நன்மை தீமைகளை அறிய முடியாது.
இந்த வாழ்க்கையில் இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ். ஒவ்வொரு பொருளுடைய காரியத்துடைய நன்மை தீமைகளை அறிந்தவன் அல்லாஹ். ஒவ்வொருவருடைய முடிவை அறிந்தவன் அல்லாஹ். அவனுடைய அறிவு ஆழமானது. விசாலமானது. எல்லையற்றது. நம்முடைய அறிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. உலகத்தின் அறிவாளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ்வுடைய ஹிக்மத் - ஞானத்தை சூழ்ந்தறிய முடியாது.
وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا
அல்லாஹ்வுடைய ஹிக்மத்துகளை, ஞானங்களை, அறிவுகளை யாரும் சூழ்ந்தறிய முடியாது. (அல்குர்ஆன் 20:110)
وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ
அல்லாஹ்வுடைய அறிவு ஞானத்திலிருந்து அற்பமான அளவை தான் மனிதனால் அறிந்து கொள்ள முடியும். (அல்குர்ஆன் 2:255)
وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
கல்வியில் சொற்ப அளவே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:85)
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படிப்பட்ட ஒரு பரிதாபப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய நாம், நமக்கு அழகு என்ன? அல்லாஹ்விற்கு முன்னால் அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் நாம் பணிந்து விட வேண்டும். சரணடைந்து விட வேண்டும். நம்மையும், நமது ஆசைகளையும், நம்மையும், நம்முடைய தேவைகளையும் அவனுக்கு முன்னால் ஒப்படைத்து விட வேண்டும்.
யா அல்லாஹ்! என்னை உனக்கு முன்னால் ஒப்படைத்து விட்டேன். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 247.
நான் யார்? எனக்கென்று ஒரு சுய விருப்பம், ஒரு தேடல் இருப்பதற்கு ஒரு அதிகாரம் இருப்பதற்கு. நான் யார்? உன்னுடைய அடிமை நான். என்னுடைய நன்மை தீமைகளுக்கு நான் பொறுப்பானவன் அல்ல. நான் விரும்புவேன். ஆனால், அது எனக்கு கெட்டதாக இருக்கும். நான் வெறுப்பேன். ஆனால், அது எனக்கு நன்மையாக இருக்கும். ரப்பே! உன் இடத்தில் என்னை ஒப்படைத்து விட்டேன்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ வஹீயின் ஞானம் கொடுக்கப்பட்டவர்கள். சொல்கிறார்கள்;
فلا تَكِلني إلى نَفسِي طرفةَ عينٍ
யா அல்லாஹ்! என்னை என்னிடம் சாட்டி விடாதே. யா ரப்! என்னை என்னிடம் ஒப்படைத்து விடாதே!
அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் இப்னு அபீபக்கரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூது, எண் : 5090.
என்னை எனக்கு கொடுத்து விடாதே! நான் பலவீனப்பட்டு விடுவேன். நம்முடைய நேர்வழிக்கு நாம் பொறுப்பேற்க முடியுமா?
அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில் ஒருவரை வழி கெடுத்து விடுவான். நம்முடைய அறிவுக்கு நாம் பொறுப்பேற்க முடியுமா? அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில் அவனை பைத்தியமாக ஆக்கிவிடலாம். நம்முடைய ஆரோக்கியத்திற்கு நாம் பொறுப்பேற்க முடியுமா? அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில் அவனை படுத்த படுக்கையிலே மாற்றிவிடலாம்.
நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நமக்கு என்ன சக்தி இருக்கிறது? அல்லாஹ்விற்கே எல்லா சக்திகளும். அல்லாஹ்விற்கே எல்லா ஆற்றலும்.
مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهِ
அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. இன்னும், அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை அனுப்பித்தருபவர் எவரும் இல்லை. இன்னும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 35:2)
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 10:107)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விற்கு முன்னால் அடியான் அப்படியே சரணடைந்து விட வேண்டும். பணிந்து விட வேண்டும். பயந்து விட வேண்டும். அவனை நோக்கி ஓடிவிட வேண்டும்.
فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ
எப்படி அழைக்கிறான் அந்த ரப்பு. அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள் என்று சொல்லவில்லை. ஓடுங்கள் என்று சொல்கின்றானா?
فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ
அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடி வாருங்கள். (அல்குர்ஆன் 51:50)
அல்லாஹ் அக்பர்! எப்படி? சாதாரணமாக அல்ல. உங்களது இறை நம்பிக்கை ஈமானோடு, உங்களது யகீனோடு, உங்களது ஆசையோடு, உலகத்திலே யாரையும் நேசிக்காத அளவு, யாரையும் விரும்பாத அளவு, யார் மீதும் வைக்காத அன்பின் அளவு, யாரையும் பார்த்து பயப்படாத அளவிற்கு அல்லாஹ்வை பயந்து ஆசை வைத்து ஓடோடி வாருங்கள்! அல்லாஹு அக்பர்!
யா அல்லாஹ்! நான் எங்கே இருந்தாலும் எனது முகம் உன்னை நோக்கி தான். எனக்கு இந்த உலகத்தில் யாரும் தெரியாது. உன்னை தான் நான் அறிவேன். எனது உள்ளம் யாரையும் நம்பாது. உன்னை தான் நம்பிக் கொண்டிருக்கிறது. என் பெற்றோர், என் தாய் தந்தை, மனைவி, குடும்பம், சுற்றார் எல்லோரும் இருக்கிறார்கள். எல்லோரும் நீ கொடுத்தவர்கள் தான். நீ நினைத்தால் தான் அவர்களால் எனக்கு நல்லது செய்ய முடியும். நீ நினைக்கவில்லை என்றால் அவர்களால் எந்த நன்மையும் எனக்கு செய்ய முடியாது.
நான் யாரை எனக்கு இணக்கமானவர்களாக நினைக்கின்றானோ, அவர்கள் எனக்கு பாதகமானவர்களாக மாறலாம். மாற்றக் கூடியவன் அல்லாஹ். யாரை நான் எனக்கு பாதகமானவர்களாக நினைக்கின்றேனோ அவர்கள் எனக்கு சாதகமானவர்களாக மாறலாம். உள்ளங்கள் அல்லாஹ்வின் கரத்திலே.
அடியார்களின் உள்ளங்கள் ரஹ்மானுடைய விரல்களுக்கு இடையிலே இருக்கின்றன. அவன் எப்படி வேண்டுமானாலும் அதை புரட்டுவான்.
அன்பு சகோதரர்களே! இன்று நாம் துஆவுடைய அருமையை அறியவில்லை. துஆ கேட்கிறோம். யாரும் துஆ கேட்கவில்லை என்று சொல்லவில்லை. துஆ கேட்கிறோம். ஆனால், எப்படி துஆ கேட்க வேண்டுமோ, எந்த நம்பிக்கையில் துஆ கேட்க வேண்டுமோ, எந்த ஆசையோடு துஆ கேட்க வேண்டுமோ, எந்த நம்பிக்கையோடு துஆ கேட்க வேண்டுமோ, எந்த உறுதியோடு துஆ கேட்க வேண்டுமோ அந்த அடிப்படையில் துஆ கேட்கிறோமா?
இப்ராஹிம் நபி ஒரு துஆ செய்துவிட்டு சென்றார்கள்.
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!” (அல்குர்ஆன் 14:37)
கருத்து : என் இறைவா! என்னுடைய ஆண்டவனே, என்னுடைய ரப்பே, என்னுடைய தலைவனே, என்னுடைய சந்ததிகளை உன்னுடைய புனிதமான வீட்டுக்கு அருகிலே, பாலைவனத்திலே, எந்த விவசாயமும் இல்லாத, எந்த உணவும் இல்லாத, இந்த பாலைவனத்திலே தங்க வைத்து விட்டு செல்கிறேன். இறைவா! அவர்களுக்கு உணவளிப்பாயாக. யா அல்லாஹ் இதை பாதுகாப்பு மிக்க ஒரு நகரமாக ஆக்குவாயாக என்று ஒரு துஆ செய்துவிட்டு சென்றார்கள்.
எப்பேர்ப்பட்ட நம்பிக்கையோடு செய்திருப்பார்கள்! எந்த யகீனோடு செய்திருப்பார்கள்!
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா அந்த பூமியை எப்படி மாற்றினான்? யோசித்துப் பாருங்கள். எப்பேர்பட்ட பாதுகாப்பை அவர்களின் சந்ததிகளுக்கு அல்லாஹ் கொடுத்தான்.
இன்று நாம் துஆ கேட்கிறோம். துஆ கேட்காமல் இருப்பதில்லை. ஆனால், துஆ கேட்டுவிட்டு அதற்கான காரண காரியங்களை, நம்முடைய சக்தியை கொண்டு நம்பிக்கை கொண்டிருக்கிறோமே தவிர, அல்லாஹ்வுடைய ஆற்றலை கொண்டு தான் நான் நம்பியது பலன் தரும். இல்லை என்றால் பலன் தராது.
அல்லாஹ்வின் மீது உண்டான நம்பிக்கை அது உறுதியாக இருக்க வேண்டும். அல்லாஹ்வோடு நமக்கு இருக்கக்கூடிய ஒவ்வொன்றும், இந்த படைப்புகளோடு நமக்கு இருக்கக்கூடியதை விட அதிகமானதாக இருக்க வேண்டும்.
وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ
நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். (அல்குர்ஆன் 2:165)
தாயை நேசிக்கலாமா? தந்தையை நேசிக்கலாமா? மனைவியை பிள்ளைகளை நேசிக்கலாமா? ஆம் கண்டிப்பாக நேசிக்க வேண்டும். ஆனால், அவர்களின் பிரியத்தை விட, நேசத்தை விட, அன்பை விட அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு நமக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
படைப்புகளுக்கும், நமக்கும் இடையில் இருக்கக்கூடிய உறவுகளை விட, அல்லாஹ்வோடு நமக்கு இருக்கக்கூடிய யகீன் என்ற உறவு நமக்கு அதிகமாக, ஆழமாக உறுதியாக இருக்க வேண்டும்.
இன்று நாம் என்ன செய்கிறோம்? நம்முடைய பிள்ளைகளுக்கு துன்யாவுடைய ஆசைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆசைகளை மட்டுமல்ல. துன்யாவுடைய வெறிகளை அவர்களுக்கு போதையாக ஏற்றிக் கொண்டே இருக்கிறோம். துன்யாவுடைய ஆசைகளை வெறியாக அவர்களுக்கு ஊட்டுகின்றோம்.
படிப்பு தேவை. ஆனால் படிப்பின் மீது அல்லாஹ்வை விட நம்பிக்கை வைத்து விடாதே. உனக்கு நல்ல உத்தியோகம் தேவை. ஆனால், ரஸ்ஸாக் யார்?
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன். (அல்குர்ஆன் 51:58)
உனக்கு நல்ல வியாபாரம் தேவை. ஆனால் ரஸ்ஸாக் யார்? அல்லாஹ்.
اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ
நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள். (அல்குர்ஆன் 3:37)
உணவளிப்பவன் அல்லாஹ். யாருக்கெல்லாம் உணவளிக்கின்றான்? ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கு உணவளிக்கின்றான். கடலில் நீந்தும் மீன்களுக்கு உணவளிக்கின்றான். மண்களிலும், பாறைகளிலும் இருக்கக்கூடிய புழு பூச்சிகளுக்கு அல்லாஹ் உணவளிக்கின்றான்.
وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ
எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். இன்னும், அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 29:60)
அல்லாஹ் நம்மை சிந்திக்க சொல்கின்றான். மனிதனே! என் அடியானே! நான் உணவளிப்பேன் என்று என் மீது நம்பிக்கை இல்லையா?. உன்னுடைய இந்த அற்ப உலக வாழ்க்கை வாழ்வாதாரத்திற்காக என்னை மீறுகிறாயா? என்னை எதிர்க்கிறாயா? என் கட்டளைகளை புறக்கணிக்கின்றாயா? என் வணக்க வழிபாட்டை விட்டு தூரம் ஆகிறாயா? உன் மீது கடமையாக்கப்பட்ட இபாதத்துகளை நீ விடுகிறாயா?
இந்த பூமியிலே பார்க்கவில்லை. எவ்வளவு கால்நடைகள், எவ்வளவு உயிரினங்கள், அவை தன் முதுகின் மீது உணவுகளை சுமந்து செல்கின்றனவா? அவை தன் முதுகின் மீது உணவுகளை சுமந்து செல்கின்றனவா?
அவற்றுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான். உனக்கும் அல்லாஹ் தான் உணவளிப்பான். ஏன் உனக்கு அந்த அவநம்பிக்கை? மனிதனுக்கு பயம், பயம், பயம், பயம். நாளைய உணவு, நாளைய வாழ்க்கை பற்றிய பயம். நாளை ஹயாத்தாக இருந்தால் நாளை வாழ்வாதாரத்துக்கு அல்லாஹ் நமக்கு பொறுப்பு.
أنَّ نفسًا لَن تموتَ حتَّى تستكمِلَ أجلَها
அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு ஆன்மாவும் சாக முடியாது. எந்த ஒரு ஆன்மாவும் மரணிக்காது. அது தன்னுடைய ரிஸ்கை, தன்னுடைய உணவை பரிபூரணமாக்கிக் கொள்கின்ற வரை.
அறிவிப்பாளர் : அபூ உபாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 2080.
இந்த உலகத்தில் ஒரு பருக்கை உணவின் மீது நம்முடைய பெயர் இருக்கின்ற வரை நம்முடைய மலக்குல் மௌத் நம்முடைய உயிரை வாங்க மாட்டார். நம்முடைய உயிர் வாங்கப்பட்டு விட்டது என்றால் இனி இந்த உலகத்தில் நமக்கு உணவு இல்லை.
பத்து வயது அந்தப் பச்சை பாலகன் - இப்னு அப்பாஸுக்கு, அல்லாஹ்வுடைய தூதர் ஈமானின் போதனைகளை நெஞ்சத்திலே அப்படியே ஊட்டுகிறார்கள். அந்த யகீனை தருகின்றார்கள்.
إذا سأَلتَ فاسألِ اللَّهَ ، وإذا استعَنتَ فاستَعِن باللَّهِ
நீ கேட்டால் அல்லாஹ்விடத்தில் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! உலக மக்கள் எல்லாம் மனிதர்கள், ஜின்கள் எல்லாம் உனக்கு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் எழுதியதை தவிர எதுவும் செய்ய முடியாது. அறிந்து கொள்! உலக மக்கள் எல்லாம் உனக்கு தீங்கு செய்ய நாடினால் அல்லாஹ் எழுதியதை தவிர எதுவும் செய்ய விட முடியாது. (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மதி, எண் : 2516.
அல்லாஹ்வின் அடியார்களே! துஆவின் மீது நம்பிக்கை வேண்டும். நான் அல்லாஹ்விடத்தில் கேட்டேன். அல்லாஹ் எனக்கு கொடுப்பான். யூசுஃப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். யூசுஃபுடைய தந்தை யாகூபுக்கு அல்லாஹ் கொடுத்தான். எத்தனை ஆண்டுகள்? இரண்டு தசாப்தங்கள் பொறுமையாக இருந்தார்கள்.
நம்முடைய பிரச்சனை என்ன? பொறுமை இல்லை. நம்முடைய பிரச்சனை என்ன? அல்லாஹ்வின் மீது அழகிய நம்பிக்கை இல்லை. அல்லாஹ் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு கேட்பதில்லை.
எனக்கு தீர்வு அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் கேட்டேன். அல்லாஹ் எனக்கு தீர்வை கொடுப்பான். அல்லாஹ் எனக்கு அவனது உதவியை இறக்குவான். அல்லாஹ் என்னுடைய கடனை அடைப்பான். என்னுடைய பிரச்சனையை தீர்ப்பான் என்னுடைய நோயை குணப்படுத்துவான்.
وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ
“இன்னும், நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.” (அல்குர்ஆன் 26:80)
அந்த யகீனோடு அல்லாஹ்விடத்தில் கேட்பதில்லை. அறை நம்பிக்கையோடு கேட்கிறோம். பாதி நம்பிக்கையோடு கேட்கிறோம்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கேட்டார். அப்படிப்பட்ட ஒரு துஆவை அவருக்கு முன்னாலும் எந்த நபியும் கேட்டதில்லை. அவருக்குப் பின்னாலும் எந்த நபியும் கேட்டதில்லை.
رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ
இறைவா! உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒரு ஆட்சியை எனக்கு கொடு என்று கேட்டார். (அல்குர்ஆன் 38:35)
اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
நீ கொடுக்கக் கூடியவன்.
நீ கொடுத்தால் யார் தடுக்க முடியும்? என்ற யகீனோடு கேட்டார். அல்லாஹ் கொடுத்தான். எப்பேர்பட்ட அற்புதங்களை கொடுத்தான். அல்லாஹு தஆலா காற்றை வசப்படுத்திக் கொடுத்தான். பறவைகளை வசப்படுத்திக் கொடுத்தான். உலகத்தில் உள்ள அத்தனை ஜின்களையும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். அத்தனை மிருகங்களையும் அல்லாஹ் வசப்படுத்தி கொடுத்து விட்டான். பறவைகளை அல்லாஹ் வசப்படுத்தி கொடுத்து விட்டான். இப்பேற்பட்ட துஆவுடைய யகீனோடு கேட்டார்கள்.
ஜக்கரியா அலைஹி அஸ்லாத்து வஸ்ஸலாம் சொன்னார்கள்; முடி அப்படியே நரைத்து விட்டது.என்னுடைய மனைவியோ முற்றிலும் மலடியாக இருக்கின்றாள். ஆனால், ரப்பே நீ நாடினால் கிழவனும் குழந்தை பெற்றெடுப்பான். மலடியும் குழந்தை பெற்றெடுப்பாள். இறைவா! எனக்கு ஒரு நல்ல சந்ததியை கொடு என்று பிரார்த்தித்தார்கள். (அல்குர்ஆன் 19:4)
அல்லாஹ்வால் கொடுக்க முடியும். இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே கேட்டார்கள். அவர்களுக்கு குழந்தையை அல்லாஹ் கொடுத்தான். குழந்தை கிடைக்காத வயதில் கேட்டார்கள். அல்லாஹ் கொடுத்தான்.
யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் கடலின் ஆழத்தில் மீன் வயிற்றிலே மாட்டிக் கொண்டார். யார் இருக்கிறார்கள் அங்கே? இறைவா! ரப்பே! உன்னை தவிர வேறு யாரும் இல்லை.
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ
“நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.” (அல்குர்ஆன் 21:87)
அல்லாஹ்வின் தூதர் ﷺ மக்காவில் 13 ஆண்டுகால வாழ்க்கையிலும், மதினாவில் 10 ஆண்டுகால வாழ்க்கையிலும் மக்களுக்கு அல்லாஹ்விடத்திலே கேளுங்கள் என்று அல்லாஹ்வின் மீது உண்டான அந்த யகீனை கற்றுக் கொடுத்தார்கள்.
அல்லாஹு தஆலா முஃமின்களுக்கு சொன்னான், என்னிடத்திலே கேளுங்கள். என்னிடத்தில் மன்றாடுங்கள்.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً
தாழ்மையாகவும் மறைவாகவும் உங்கள் இறைவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். (அல்குர்ஆன் 7:55)
அழுது மன்றாடி உங்களுடைய ரப்பிடத்திலே கேளுங்கள். பயந்து பணிந்து கேளுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! அந்த யகீன் நமக்கு வர வேண்டும். இஹ்லாஸ் வரவேண்டும். அவசரப்படக்கூடாது அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் எனக்கு நான் கேட்டதை கொடுப்பான் அதில் நல்லது இருந்தால். அவனுக்கு தெரியும். என் ரப்புக்கு தெரியும்.
அல்லாஹ்விடத்தில் பொதுவாக கேட்க வேண்டும். யா அல்லாஹ்! எனக்கு ஹலாலான வியாபாரத்தை கொடு! யா அல்லாஹ்! எனக்கு சாலிஹான மனைவியை கொடு! யா அல்லாஹ்! எனக்கு நல்லதை கொடு!
யா அல்லாஹ்! நன்மையை கொடு! வெளிப்படையானதை, மறைந்ததை, எனக்கு தெரிந்ததை, எனக்கு தெரியாததை, சமீபமானதை, தூரமானதை இத்தனை நன்மைகளை எல்லாம் எனக்கு கொடு. யா அல்லாஹ் தீமைகளை விட்டு பாதுகாப்பு தேடுகிறேன். மறைந்ததை, வெளிப்படையானதை, சமீபமானதை, தூரம் ஆனதை, நான் அறிந்ததை, நான் அறியாததை எல்லா தீமைகளில் இருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 3116.
இன்று, நமது பிரச்சனை என்ன? ஒன்றைப் பிடித்துக் கொண்டு இதை கொடு என்று அல்லாஹ்விடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அது நமக்கு தீமையாக இருக்கும். கெட்டதாக இருக்கும். அல்லாஹு தஆலா தாமதப்படுத்துவான். இல்லையென்றால் அதைவிட சிறந்ததை அல்லாஹ் கொடுத்திருப்பான். இல்லையென்றால் ஒரு பெரிய பிரச்சினையை அல்லாஹ் தீர்த்து இருப்பான்.
அதையெல்லாம் புரியக்கூடிய ஆற்றல், அறிவு, ஞானம், ஈமான் நம்மிடத்திலே இல்லை அல்லாஹ் கொடுக்கவில்லை என்று கம்ப்ளைன்ட் பண்ணிக் கொண்டிருப்போம். அல்லாஹ்வை குறைபட்டு கொண்டிருப்போம்.
அல்லாஹ்வின் அடியார்களே! துஆவை விட்டு விடாதீர்கள். துஆவை பற்றி பிடிக்க வேண்டும். துஆ அல்லாஹ்வின் மீது உண்டான யகீனை நமக்கு தருகிறது. மன அமைதியை தருகிறது. நிராசையான துஆ அல்ல. நம்பிக்கையுடைய துஆ. துஆ மனதிற்கு ஆதரவை தருகிறது. ஆறுதலை தருகிறது. மனதிற்கு ஒரு அமைதியை தருகிறது.
முஸ்லிம்களுடைய உள்ளங்கள் இந்த துஆவை கொண்டு நம்பிக்கையில் உறுதி பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான் முஃமீன்கள் முஸ்லிம்கள் ஒருபோதும் தற்கொலை செய்வதில்லை. காஃபிர்களுக்கு இத்தகைய பாக்கியம் இல்லை. பல கடவுள்களை நம்பக் கூடியவர்கள் தான் கடவுள் தெய்வம் என்னை கைவிட்டுவிட்டது என்று சொல்லுவான்.
முஃமின் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டான். அல்லாஹ் என்னை கைவிட மாட்டான். ரப்பு எனக்கு இருக்கின்றான். மூஸா நபி சொன்னார்கள்;
اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ
(மூஸா) கூறினார்: நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு (விரைவில்) வழிகாட்டுவான். (அல்குர்ஆன் 26:62)
முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ குகையில் சொன்னார்கள்;
لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا
கவலைப்படாதே! அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று. (அல்குர்ஆன் 9:40)
அந்த யகீனை உடையவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கக்கூடிய முஃமின்கள். அந்த யகீனோடு நாம் கேட்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் மன்றாடி கேட்க வேண்டும். அழுது கேட்க வேண்டும். தர்மம் செய்து கேட்க வேண்டும். அல்லாஹ்வை புகழ்ந்து கேட்க வேண்டும். அல்லாஹ்வை போற்றி கேட்க வேண்டும். நம்பிக்கையோடு கேட்க வேண்டும். ஆதரவோடு கேட்க வேண்டும். அல்லாஹ் எனக்கு நன்மையானதை கொடு. தீமையிலிருந்து பாதுகாத்திடு. நீ என் தேவைகளை மிக அறிந்தவன் என்று அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நாம் அவனிடத்தில் கேட்பதை ஆசைப்படுகின்றான். விரும்புகின்றான். அப்பேற்பட்ட கொடை வள்ளல் அவன். அடியான் கேட்காமல் போனால் அவன் குறை படுகின்றான். கோபப்படுகிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாம் அதிகப்படுத்துவோமாக! துஆக்களின் மூலமாக. நம்பிக்கையுடைய துஆக்களின் மூலமாக. அல்லாஹு தஆலா நம்முடைய நல்ல துஆக்களை ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹ்வின் மீது ஆழமான உறுதியான நம்பிக்கை யகீனை அல்லாஹ் தஆலா நமக்கு தந்தருள்வானாக!
அல்லாஹு தஆலா எல்லா விதமான தீய கஷ்டங்களிலும் இருந்து என்னையும், உங்களையும், முஃமீன்கள், முஸ்லிம்கள் அனைவரையும் பாதுகாப்பானாக! நாம் ஆதரவு வைத்ததையும் அல்லாஹ் தருவானாக! நாம் அல்லாஹ்விடத்தில் கேட்க தவறிவிட்ட எல்லா நன்மைகளையும் அல்லாஹு தஆலா முஃமீன்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
إِذَا أتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، ثُمَّ اضْطَجِعْ علَى شِقِّكَ الأيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أسْلَمْتُ وجْهِي إلَيْكَ، وفَوَّضْتُ أمْرِي إلَيْكَ، وأَلْجَأْتُ ظَهْرِي إلَيْكَ، رَغْبَةً ورَهْبَةً إلَيْكَ، لا مَلْجَأَ ولَا مَنْجَا مِنْكَ إلَّا إلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بكِتَابِكَ الذي أنْزَلْتَ، وبِنَبِيِّكَ الذي أرْسَلْتَ، فإنْ مُتَّ مِن لَيْلَتِكَ، فأنْتَ علَى الفِطْرَةِ، واجْعَلْهُنَّ آخِرَ ما تَتَكَلَّمُ بهِ. قالَ: فَرَدَّدْتُهَا علَى النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بكِتَابِكَ الذي أنْزَلْتَ، قُلتُ: ورَسولِكَ، قالَ: لَا، ونَبِيِّكَ الذي أرْسَلْتَ. الراوي : البراء بن عازب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 247 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (247)، ومسلم (2710)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வீராக. பிறகு உமது வலப்பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்வீராக.
பிறகு பின்வருமாறு கூறுவீராக: அல்லாஹும்ம! அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க; வ ஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க; வ அல்ஜஃ(த்)து ழஹ்ரீ இலை(க்)க ரஃக்ப(த்)தன் வ ரஹ்ப(த்)தன் இலை(க்)க; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்(க்)க இல்லா இலை(க்)க. அல்லா ஹும்ம ஆமன்(த்)து பி கிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த; வ பி நபிய்ய(க்)கல்லதீ அர்சல்(த்)த.
இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்”.
(இவ்வாறு பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீர் இறந்துவிட்டால் நீர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர். இந்தப் பிராத்தனையை உமது (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்வீராக!
இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்பச் சொல்லிக் காட்டினேன். “இறைவா! நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிவைத்த தூதரையும் நான் நம்பினேன்” என்று கூறியபோது, (தூதர் என்பதைக் குறிக்க) ‘வ ரசூலிக்க’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இல்லை ‘வ நபிய்யிக்க’ என்றே குறிப்பிடுவீராக” என்றார்கள்.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 247.
குறிப்பு: (2)
يا غُلامُ إنِّي أعلِّمُكَ كلِماتٍ ، احفَظِ اللَّهَ يحفَظكَ ، احفَظِ اللَّهَ تَجِدْهُ تجاهَكَ ، إذا سأَلتَ فاسألِ اللَّهَ ، وإذا استعَنتَ فاستَعِن باللَّهِ ، واعلَم أنَّ الأمَّةَ لو اجتَمعت علَى أن ينفَعوكَ بشَيءٍ لم يَنفعوكَ إلَّا بشيءٍ قد كتبَهُ اللَّهُ لَكَ ، ولو اجتَمَعوا على أن يضرُّوكَ بشَيءٍ لم يَضرُّوكَ إلَّا بشيءٍ قد كتبَهُ اللَّهُ عليكَ ، رُفِعَتِ الأقلامُ وجفَّتِ الصُّحفُ . الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم: 2516 | خلاصة حكم المحدث : صحيح التخريج : أخرجه الترمذي (2516) واللفظ له، وأحمد (2669)
உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!
மேலும், நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மதி, எண் : 2516.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/